வாஷிங்டன்: செய்தியாளர்கள் சந்திப்பின்போது பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அதிபர் ஜோ பைடன் திட்டியது சர்ச்சையாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபரின் மாளிகையான  வெள்ளைமாளிகையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, கேள்வி எழுப்பிய செய்தியாளரை அதிபர் ஜோ பைடன் கடிந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஜோ பைடன் நிதானத்தை இழந்து செய்தியாளரை திட்டியது விமர்சனங்களை எழுப்பி உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பின் போதும், மிக அருமையான கேள்விகளை கேட்பதாக டூசி என்ற செய்தியாளரை  பாராட்டுவதுபோல அதிபர் ஜோ பிடன் விமர்சித்திருந்த நிலையில், இந்த வாரம் கடுமையாக திட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு நிலையில், விலைவாசிகள் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.இதனால் ஆத்திரமடைந்த ஜோ பிடன் செய்தியாளரை திட்டும் வகையில் முணுமுணுத்தார். எனினும் அவரது பேச்சு அங்கிருந்த மைக்ரோபோனிலும், காணொலியிலும் பதிவானதால் கூடியிருந்த சக செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பத்திரிகையாளரை ஜோ பிடன் திட்டிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலானாது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள், செய்தியாளர் முறையான தரவுகள் இல்லாமல் கேள்வி கேட்டதால்,  அதிபர்  கடிந்துகொண்டதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில்,  இந்த சம்பவம் நடத்த அடுத்த ஒருமணி நேரத்தில்,  அதிபர் ஜோ பிடன் அந்த செய்தியாளரை அழைத்து `தனிப்பட்ட முறையில் உங்களை குறிப்பிட்டு பேசவில்லை’ என வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.