இரு மருத்துவர்கள் கைகளை நீட்டி தகராறு செய்யும் காட்சி

ஜோத்பூர்,

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மருத்துவமனை ஒன்றில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், சிசேரியனுக்காக ஆபரேஷன் தியேட்டரினுள் வயிறு அறுக்கப்பட்ட நிலையில், மருத்து வர்களுக்கு இடையே ஏற்பட்ட ஈகோ  காரணமாக, தாயின் வயிற்றின் உள்ளேயே மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

டாக்டர்களின் இந்த மனிதாபிமானமற்ற செயல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த வீடியோவும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது சுகப்பிரசவம் ஏற்படாத சூழ்நிலையின் காரணமாக சிசேரியன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து சிசேரியன் செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்த மருத்துவர்கள், அந்த கர்ப்பிணி பெண்ணை, பிரசவத்திற்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயாராயினர்.

அப்போது, அறுவை சிகிச்சை மருத்துவருக்கும், மயக்க மருந்து சிகிச்சை மருத்துவருக்கும் இடையே ஈகோ காரணமாக தகராறு மூண்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளி சாப்பிட்டாரா என்பதை அறுவை சிகிச்சை மருத்துவர் கேட்டபோது, மயக்க மருந்து மருத்துவருக்கும், அவருக்கும் இடையே பிரச்சினை தொடங்கிய தாகவும், மயக்க மருந்து நிபுணர் ஜூனியர் டாக்டர் என்பதால் இருவருக்கும் இடையே ஈகோ காரணமாக பிரச்சினை வெடித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அறுவை சிகிச்சைக்கு தயாராக, ஆபரேஷன் தியேட்டரின் டேபிளில் கிடத்தப்பட்டிருந்த அந்த பெண்ணின் வயிறு, குழந்தையை வெளியே எடுப்பதற்காக அறுக்கப்பட்ட நிலையில்,  இருவருக்கும் இடையே யான தகராறு அதிகரித்து , மோசமான வார்த்தகளால் ஒருவருக்கு ஒருவர் திட்டியும்,  கைகளை நீட்டியும் தாக்குலுக்கு முற்படும் அளவுக்கு சென்றனர்.

இதன் காரணமாக வயிறு கிழிக்கப்பட்ட நிலையில்,  மருத்துவர்களின் தகராறு காரணமாக அந்த பெண்ணின் வயிற்றின் கர்ப்பப் பையில் இருந்து குழந்தையை உடனே வெளியே எடுக்க முயற்சிக்காததால், அந்த குழந்தை,  தாயின் கர்ப்பப் பையிலேயே மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது.

ஆபரேஷன் தியேட்டரினுள், சிசேரியன் அறுவை சிகிச்சை நடைபெறும் வேளையில், இரு மருத்துவர்களும் செவிலியர்கள் முன்னிலையில் சத்தமிட்டு சண்டை போட்டது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து, உமைத் மருத்துவனை  கண்காணிப்பாளர் கூறுகை யில், பிரசவத்துக்கு அப்பெண் வரும்போது சிசுவின் இதயதுடிப்பு குறைந்திருந்தது. அதன் காரணமாகவே குழந்தை இறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

இந்த வாய்த்தகராறையும், இதனால் குழந்தை இறந்ததையும் அறுவை சிகிச்சை அறைக்குள் இருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவரே  படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

இந்த பிரச்சினை காரணமாக மருத்துவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து ராஜஸ்தான் ஐகோர்ட்டு தானாகவே வழக்கு பதிவு செய்து, இன்றே அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய மருத்துவர்களே, ஈகோ காரணமாக ஒரு குழந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்தது வேதனையானது, இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் கடும்  அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.