துபாய்

வேலை தேடுவோருக்கு போலி அமீரக குடியிருப்பு உத்தரவை அளித்து பெரிய மோசடி நடந்து வருகிறது.

உலகெங்கும் வேலைவாய்ப்பின்றி தவிப்பவர் ஏராளமாக உள்ளனர்.  அவர்களில் பலருக்கும் அரேபிய நாடுகளில் பணி புரிய வேண்டும் என்னும் கனவு உள்ளது.  இதற்கு முக்கிய காரணம் அரபு  நாடுகளில் அளிக்கப்படுவதாகக் கூறப்படும் ஊதியம் ஆகும்.   மேலும் பலரும் அரபு நாடுகளில் வேலை கிடைப்பது எளிது எனக் கருதி வருகின்றனர்.    பல மோசடி பேர்வழிகள் இதை பயன்படுத்தி ஆதாயம் பெற்று வருகின்றனர்.

இது குறித்து விசா மற்றும் பாஸ்போர்ட் பெற்றுத் தரும் நிறுவனமான வி எஃப் எஸ் குளோபல் நிறுவன தலைமை அதிகாரி வினய் மல்கோத்ரா, “கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 560க்கும் அதிகமானோர் பல  நிறுவனங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு உத்தரவை அளித்து விடுவதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த போலி நிறுவனங்கள் வேலை தேடுவோரை இ மெயில் மூலம் அவர்களின் கல்வித்  தகுதி உள்ளிட்டவற்றுக்குத் தகுதியான வேலை வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிப்பார்கள்.  அவர்கள் வேலை தேடுவோரின் விவரங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுடைய நிதி நிலை குறித்து அறிந்துக் கொள்கின்றனர்.  அதன்படி போலி வேலை வாய்ப்பை அளித்து குடி பெயர்ச்சிக்குத் தேவையான செலவு குறித்து தெரிவிப்பார்கள்.

அந்த பணத்தை அளித்தால் தாங்களே குடிபெயர்வு உத்தரவைப் பெற்றுத் தருவதாக ஆசை காட்டுவார்கள்.  ஒரு சில நேரங்களில் வேலையில் சேர்ந்த உடன் இந்த பணம் திரும்ப அளிக்கப்படும் எனப் போலி வாக்குறுதிகளும் அளிக்கப்படுவது உண்டு.  எங்கள் நிறுவனம் வேலை வாய்ப்பு தேடித் தரும் நிறுவனம் அல்ல எனினும் இது குறித்து நாங்கள் எச்சரிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மல்கோத்ரா, “ஏமாற்றுவோர் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறும் விளம்பரத்தில் தாராளமான ஊதியம் மற்றும் நம்பத்தகாத அளவுக்குச் சலுகைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.   அல்லது ஒரு போலியான இ மெயில் முகவரியில் இருந்து நீங்கள் விண்ணப்பிக்காத ஒரு நிறுவனத்தில் இருந்து அவர்களே வேலை வாய்ப்பு அளிப்பதாகத் தகவல்கள் வரும்.   நேர்காணல் நடக்காமல் வேலை வாய்ப்பு கிடைக்கும்  என்பதை யாரும் நம்பக் கூடாது” என எச்சரித்துள்ளார்.

அனைத்து நாட்டிலும் உள்ள அமீரக தூதரக அதிகாரிகள் இது குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   இந்தியாவில் உள்ளவர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் இந்த நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் போலியானதா என்பதைக் கண்டறிய முடியும்.   அல்லது அமீரக தூதரகம் மூலமும் இதைக் கண்டறிய முடியும்.   பொதுவாக இந்த ஏமாற்று பேர்வழிகள் சுற்றுலா விசாவை பெற்றுத் தருகின்றனர்.   இது அவர்களின் வலையாகும்  சுற்றுலா விசாவைக் கொண்டு எந்த நாட்டிலும் பணி புரிய முடியாது” எனக் கூறி உள்ளனர்.

செய்யகூடியவைகளும் கூடாதவைகளும்

1.       வேலை தேடுவோர் எப்போதும் அறிமுகமற்ற பெயர் தெரியாத நிறுவனங்கள் அளிக்கும் வேலை வாய்ப்புக்களை ஏற்கக் கூடாது.

2.       உங்கள் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது.

3.       சமூக வலைத் தளங்கள் போன்றவற்றில் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்ப எண்களை வெளியிடக் கூடாது.

4.       நம்ப முடியாத அளவு ஊதியம் அளிப்பதைக் கண்டு மயங்கக் கூடாது

5.       தனிப்பட்ட மற்றும் நிதி நிலை விவரங்கள் மற்றும்  பணத்தை அளிக்கும் முன்பு இது போல நிறுவனங்கள் குறித்து சோதித்து உண்மையை அறிய வேண்டும்

6.       மற்ற நிறுவனங்களை விட அதிக அளவில் ஊதியம் மற்றும் சலுகை அளிக்கும் நிறுவனங்கள் குறித்து அவசியம் சோதனை செய்ய வேண்டும்

7.       குடிபெயர்வு மற்றும் வெளிநாடு செல்ல அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும்