“ஜேஎன்யு மாணவர் தற்கொலைதான் செய்துகொண்டார்.. காரணம் தெரியவில்லை” : காவல் அதிகாரி விளக்கம்

டில்லி:

மிழகத்தைச் சேர்ந்த ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலைதான் செய்துகொண்டிருக்கிறார் என்றும் அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும்  டில்லி தெற்கு துணை காவல் ஆணையர் ஈஷ்வர் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தின் மகன் முத்துகிருஷ்ணன் டில்லி, ஜேஎன்யு கல்லூரியில் வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து வந்தார். இந்த நிலையில்,  முத்துக்கிருஷ்ணன் அவரது நண்பரின் அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.  இவரது  மரணத்தில் மர்மம் இருப்பதாக  அவரது  நண்பர்கள் மற்றும் பெற்றோர் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள்.

இதற்கிடையே டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முத்துக்கிருஷ்ணனின் பிரேத பரிசோதனை நடந்தது. அவரது உடலை வாங்க மறுத்து, நீதி விசாரணை கோருகிறார்கள் பெற்றோர்.

இந்த நிலையில் டில்லி தெற்கு துணை காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர், “மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியிருக்கிறது. ஆனால் அவரது அறையில் எந்த கடிதமும் கிடைக்கவில்லை.  ஆகவே, அவரின் தற்கொலை குறித்த காரணம் தெரியவில்லை.  ஆனால் அவர் சமீபகாலமாக மன அழுத்தத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது.

தடயவியல் துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  தற்கொலை தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

 


English Summary
JNU student committed suicide .but, unknown reason ": Police Officer Explanation