விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில், அந்த மாணவியின் உடல் 2முறை பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், மாணவியின் பெற்றோரின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, 2முறை நடத்தப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கை குறித்து,  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ஜிப்மர் ஆய்வு குழுவின் ஆய்வறிக்கை கடந்த 22ந்தேதி விழும்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வறிக்கையின் நகல் தங்களுக்கு வேண்டும் என மாணவியின் பெற்றோர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்று, ஆய்வறிக்கை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், மாணவியின் 2 உடற்கூராய்வு அறிக்கை, குழு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை பெற்றோரிடம் நாளை வழங்குவதாக தெரிவித்திருந்தது.

 இந்த நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், தற்போது ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என நீதிபதி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கை மட்டுமே மாணவி தரப்பு வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.