சென்னை:

சீன அதிபர் இன்று மதியம் சென்னை வர உள்ள நிலையில், சென்னை முதல், அவர் பிரதமர் மோடியுடன் சந்திக்க உள்ள மாம்மல்லபுரம் வரை 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி, சீன அதிபர்  ஜின் பிங் சந்திப்பு தமிழகத்தின் புராதான நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக சந்திப்பு நடைபெற உள்ள மாம்மல்லபுரம் உள்பட பல பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சீன அதிபர், சென்னையில் தங்குவதை ஒட்டி 7 அடுக்கு பாதுகாப்பும், பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பும் வழங்கியுள்ள மத்திய மாநில அரசுகள்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி 11.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை தமிழக ஆளுநர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவேற்றார்கள். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்லும் மோடி, அங்கு கோவளத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.

இன்னும் சில மணி நேரத்தில் சீன அதிபர்  ஜின் பிங் தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார்.  இதையொட்டி சாலை இரு புறத்திலும் போலீசார் அணிவகுத்து  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிண்டி நட்சத்திர ஓட்டலில் ஜின் பிங் தங்குவதை ஒட்டி, அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜின் பிங் தங்கும் அறை, அந்த அறை இருக்கும் மாடியில் முதல் அடுக்கு பாதுகாப்பு மொத்தமும் சீன அதிபரின் தனி பாதுகாப்பு படையின் வசம் உள்ளது. இதே போல அந்த மாடிக்கு செல்லும் வழியில் இராண்டாம் அடுக்கு பாதுகாப்பு உள்ளது. அந்த பாதுகாப்பிலும் சீன பாதுகாப்பு அதிகாரிகளே ஈடுபடுகிறார்.

கிண்டி ஓட்டலின் முதல் தளத்தில் இருந்து ஜின் பிங் தங்கும் அறை உள்ள இடத்திற்கு செல்லும் வழி நெடுகிலும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார். இது மூன்றாவது அடுக்கு. இதனை அடுத்து ஓட்டலில் கீழ் தளத்தில் தமிழக அதிவிரைவு படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இது 4வது அடுக்காகும்.

ஓட்டலில் கீழ் தளத்தை சுற்றிலும், வாயிலிலும் தமிழக போலீசார் 5 ஆவது அடுக்கு பாதுகாப்பிலும், ஓட்டலின் வெளி நுழைவு வாயிலில் 6 ஆவது அடுக்கு பாதுகாப்பிலும் , ஓட்டலின் சுற்றுச் சுவரை சுற்றிலும் சென்னை போலீசார் 7 வது அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

நாளை மதியமும், நாளை மறுநாள் காலையிலும் ஜின் பிங், கிண்டி நட்சத்திர ஓட்டலில் உணவருந்துகிறார். இதற்காக அவரது பிரத்யோக சமையல்காரர்கள் சீனாவில் இருந்து வந்துள்ளனர். சீன பாதுகாப்பு படையினரின் மேற்பார்வையில் அவர்கள் தான் ஜின் பிங்கிற்கான உணவை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மாலை  4 மணி அளவில் கிண்டி ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஜின் பிங் காரில் புறப்படுகிறார்.  இந்த சாலை நெடுகிலும் சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மாமல்லபுரத்தில் தலைவர்கள் பேச்சுவார்த்தை ஒட்டி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல பிரதமர் மோடி தங்கும் கோவளம் நட்சத்திர ஓட்டலில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தவிர கோவளம் ஓட்டல் மற்றும்,மாமல்லபுரத்தில் இருந்து இரண்டு கடல் மைல் தூரம் வரை கடலோர காவல் படையில் மூன்று கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இதன் மூலம் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் நாளையும், நாளை மறுநாளும் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.