சென்னை: தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தராஜனின்  ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள அறிவித்துள்ள குடியரசு தலைவர், இந்த மாநிலங்களுக்கு  ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், 2019 செப்டம்பர் 8-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டு,  பதவியேற்றார். பின்னர், புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பெடி ராஜினாமாவைத் தொடர்ந்து, கடந்த 2021-ல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன்,  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கில், இரு மாநில ஆளுநர் பதவிகளையும் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

ராஜினாமா குறித்து தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியபோது, ‘‘மக்கள் சேவைக்காக மீண்டும் செல்கிறேன். எனக்கு இத்தனை நாட்கள் ஆதரவு அளித்த தெலங்கானா மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்றைக்கும் உங்கள் சகோதரிதான்’’ என்றார்.

இந்த நிலையில் தமிழிசையின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவித்து உள்ளது. மேலும், தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.