ஜார்கண்டில் அராஜகம்: முஸ்லிம் எம்எல்ஏவை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிடும்படி வற்புறுத்திய பாஜக அமைச்சர்!

Must read

ராஞ்சி:

ஜார்கண்ட்மாநில சட்டமன்றத்திற்கு வெளியே முஸ்லிம் எம்எல்ஏ ஒருவரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுமாறு ஜார்கண்ட் பாஜக அமைச்சர் வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்பான் அன்சாரியிடம்,  அவரது மூதாதையர்கள் பாபரின் சந்ததியினர் அல்ல, ராமின் வம்சாவளி என்றும்  வலியுறுத்திய பாஜக அமைச்சர், அவரிடம் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிடுங்கள் என்று வற்புறுத்தி உள்ளார்.  இந்த சம்பவம் குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மாநில பாஜக அமைச்சரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சராக இருப்பவர், சி.பி.சிங். இவர்  மாநிலத்தின் சக எம்எல்ஏவான  இர்ஃபான் அன்சாரியிடம்,  உங்கள் முன்னோர் ராமர்தான், பாபர் அல்ல ” என்றும், அதனால் ஜெய்ஸ்ரீராம் என்று கூறுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார்.

இதற்கு பதிலளிக்கும் எம்.எல்.ஏ, “ராமரின் பெயரை பயன்படுத்தி என்னை அச்சம் அடைய செய்யாதீர்கள். ராமரின் பெயரைக் கெடுப்பதே நீங்கள்தான். நமக்கு வேண்டியதெல்லாம் வேலைவாய்ப்பு, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்தான். இதுவல்ல” என்கிறார்.

உடனே பதிலடியாக, “உங்களை அச்சப்படுத்த அப்படி சொல்லவில்லை. உங்களின் முன்னோர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்னதை மறக்க வேண்டாம். தய்மூர், பாபர், கஜினி உள்ளிட்டவர்கள் உங்களின் முன்னோர்கள் அல்ல. உங்கள் முன்னோர்கள் ராமரின் பக்தர்கள்” என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில பாஜக, அமைச்ச்ர சி.பி.சிங். கருத்தை, எம்.எல்.ஏ தவறாக புரிந்துகொண்டதாக தெரிவித்து உள்ளது.

கடந்த மாதம்  ஜார்கண்டில் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல வற்புறுத்தி முஸ்லீம் இளைஞரை ஒரு கும்பல் அடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article