சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் 2 பேர் இன்று நேரில் ஆஜராகினர்.

கடந்த ஆண்டு  உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில், அது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாக தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த விசாரணை ஆணையம் நேற்றுமுதல் விசாரணையை மேற்கொண்டுள்ளது. நேற்றைய விசாரணையின்போது திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன் விசாரணைக்கு ஆஜரானார். அதைத்தொடர்ந்து இரண்டு அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.

அதன்படி இன்று காலை  விசாரணை ஆணைய அலுவலகத்தில், அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் நாராயணபாபு மற்றும் மருத்துவர் மயில்வாகனன் ஆகியோர்  நேரில் ஆஜரானார்கள்.

அவர்களிடம் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். மேலும் திமுக மருத்துவர் சரவணன் அளித்த ஆவனங்கள் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.