டெல்லி: ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது இன்று பிற்பகல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தேர்வு முகமை (NTA), JEE Main 2026-இன் இரண்டாம் அமர்வு முடிவுகளை இன்று, ஏப்ரல் 20 அன்று வெளியிடவுள்ளது. முடிவுகள் வெளியாகும் துல்லியமான நேரம் குறித்து முகமை இன்னும் அறிவிக்கவில்லை. முடிவுகள் வெளியானதும், jeemain.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அவை கிடைக்கும். தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பார்வையிட, தங்களின் விண்ணப்ப எண் தேவைப்படும்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல்/ தொழில்நுட்பப் படிப்புகளில் (B.E, B.Tech/ B.Arch) சேர்க்கை பெற நாடு முழுவதும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் 2 கட்டமாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு 2 தாள்கள் கொண்டு நடத்தப்படுகிறது. முதல் தாள் பி.டெக் படிப்பிற்காகவும், இரண்டாம் தாள் பி.ஆர்க் படிப்பிற்காகவும் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் பி.டெக் படிப்புகளில் சேர லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதி வருகிறார்கள்.
அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான முதல் கட்டத் தேர்வு ஜனவரி மாதம் 21 முதல் 29 வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் இருந்து 13,04,653 மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கான முடிவுகள் பிப்ரவரி 16-ம் தேதி வெளியானது. இதில் 96.2 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர். மேலும், 12 பேர் முழு மதிப்பெண்கள் பெற்று அசத்தினர்.
அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டத் தேர்வு ஏப்ரல் 2 முதல் 8-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெற்றது. 566 தேர்வு மையங்களில் வெளிநாடுகளில் உள்ள நகரங்களை சேர்த்து 304 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 11.23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முதல் நாளின் உத்தேச விடைக்குறிப்பு ஏப்ரல் 11 தேதி வெளியாகி, 13 தேதி வரை முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
அதனையடுத்து, இதற்கான இறுதி விடைக்குறிப்பு, முடிவுகள் மற்றும் இரண்டு கட்டத் தேர்வு முடிவுகளையும் இணைந்த தரவரிசைப் பட்டியல் இன்று (ஏப்ரல் 20) வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்வு தேர்வு முகமை அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று தேர்வு முடிவுகளை இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்துக்கொண்டுள்ளனர். மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் அவர்களின் விண்ணப்ப எண், பாஸ்வோர்டு மற்றும் திரையில் தெரியும் CAPTCHA உள்ளிட்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மேலும், இரண்டு கட்டத் தேர்வுகளின் முதல் தாளில் (B.E/B.Tech) மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதில் தேர்விற்கான தரவுகள் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பட்டியல் இடம்பெற்று இருக்கும்.
இத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறும். நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் சேர்க்கை பெற இதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜேஇஇ அட்வாண்ஸ்டு தேர்வை எழுத வேண்டும். இந்தாண்டுக்கான அட்வாண்ஸ்டு தேர்வு ஐஐடி ரூர்க்கி மூலம் வரும் மே 17-ம் தேதி நடத்தப்படுகிறது.
[youtube-feed feed=1]