கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைத்து இருந்தன.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி உடைந்தது. பல்வேறு பிரச்சினைகளில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளித்து வந்தது.
இந்த நிலையில் பரபரப்பு திருப்பமாக அந்த இரு கட்சிகளும் மைசூரு மேயர் தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க ஒன்று சேர்ந்துள்ளன.
மைசூரு மாநகராட்சி மேயரை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. எந்த கட்சிக்கும் அங்கு பெரும்பான்மை கிடையாது. ஆனாலும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக கூடுதல் வார்டுகளை கைப்பற்றி இருந்தது.
பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்த தீர்மானித்து இருந்தன.
அப்படி போட்டியிட்டால் பா.ஜ.க. எளிதில் வெல்லும் சூழல் இருந்தது.
இதனால், கடைசி நேரத்தில் காங்கிரசும், மதச்சார்பற்ற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துக்கொண்டன. இதற்கு பலன் கிடைத்தது.
மைசூரு மேயர் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ருக்மினி மாதேகவுடா அமோக வெற்றி பெற்றார்.
துணை மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அன்வர் பைக் வெற்றி பெற்றார். இதனை பா.ஜக. எதிர்ப்பார்க்கவில்லை.
– பா. பாரதி