கொல்லம்: வயநாடு தொகுதி எம் பி ராகுல் காந்தி கேரளா மாநிலம் கொல்லத்தில் 3 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, கொல்லம் பகுதியில் மீனவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தவர்,  மீனவர்களுடன் படகில்  கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்தார்.

அப்போது, திடீரென்று, மீனவர் ஒருவருடன்  படகில் இருந்து கடலில் குதித்து நீந்தினார். இதனைப் பார்த்த மீனவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி யடைந்தனர். கடலில் ராகுல் அசால்ட்டாக நீந்தி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பின்னர், வலையில் சிக்கிய மீன்களை படகில் வைத்து மீனவர்கள் சமைத்துக் கொடுத்தனர். அந்த மீன்களை ருசித்துச் சாப்பிட்டார் ராகுல்காந்தி. இதுகுறித்து அவருடன் கடலுக்குள் சென்ற   மீனவர்கள்,  ராகுல் காந்தி கடலில் எங்களுடன் சுமார் 3 மணி நேரம் செலவழித்தார். இதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கே அவர் கடற்கரையில் தயாராக இருந்தார். நாங்கள் சமைத்துக் கொடுத்த மீனையும் அவர் ருசித்துச் சாப்பிட்டார் என்று பெருமைப்பட்டனர்.

மேலும், ராகுல்  எந்தவித பாகுபாடும் பார்க்காமல் எங்களிடம் மிகவும் சகஜமாகப் பழகியது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கூறியவர்கள், . கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து சில மீனவர்கள் கடலில் குதித்தனர். அப்போது எதற்காக மீனவர்கள் கடலில் குதித்தனர் என்று என்னிடம் அவர் கேட்டார். வலையில் இருக்கும் மீன்கள் சில சமயம் கடலுக்குள் சென்று விடும். அதற்காக வலையை இழுப்பதற்காகக் கடலில் குதித்துள்ளனர் என்று கூறினேன். அதைக்கேட்ட ராகுல், நானும் கடலில் குதிக்கிறேன் என்று கூறியதுடன்,   திடீரென படகில் இருந்து கடலில் குதித்தார். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடலில் அவர் நன்றாக நீந்தினார். படகில் வந்த போது எங்களது குடும்பத்தைக் குறித்தும் அவர் கேட்டறிந்தார் என்றவர், சாதாரண மனிதரைப்போல பழங்கிய ராகுலின் எளிமை தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்று புகழாரம் சூட்டினர்.