ராமண்ணா வியூவ்ஸ்:
பொதுவாக ஆபீசில் நான் தூங்குவதில்லை. ஆனால் இன்று மதியம் கண்ணைக்கட்டியது. அக்கா வீட்டிலிருந்து மட்டன் குழம்பு, இரால் வறுவல் வந்திருந்தது. தோழி, வசந்திவேறு,முருங்கைக்காய் சாம்பார், முளைக்கீரை துவட்டலும் கொண்டுவந்திருந்தாள்.
முருங்கை சாம்பாருக்கு இரால் வறுவலும், மட்டன் குழம்புக்கு முளைக்கீரை கூட்டும் அருமையான காம்பினேசன்.
அதான் உண்ட மயக்கம். ஆனாலும், ஆபீசில் தூங்கக்கூடாது என்கிற பாலிசி வைத்திருப்பதால், வாட்ஸ்அப் செய்திகளை பார்க்க ஆரம்பித்தேன்.
அதில் ஒரு பதிவு அதிர்ச்சி அளித்தது.
“ஜோக்கர் படம், தலித் ( குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிட்டு) மக்களுக்கானது. நம் இனத்துக்கு எதிரானது. அந்த படத்தை புறக்கணியுங்கள்” என்று இருந்தது.
“ஏன் இப்படி…” என்று அடுத்தடுத்த வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு சென்றால், வேறு வேறு சாதிகளைச் சேர்ந்த சில அமைப்புகளும், இதே போல குறிப்பிட்டிருந்தார்கள்.
மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உண்மையிலேயே “ஜோக்கர்” சிறந்த படம். தற்போதைய சமுதாய நிலை குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தும் படம். அதற்கு ஏன் சாதி முத்திரை என்கிற கோபம் எனக்கு வந்தது.
இது போல அறச்சீற்றம்(!) வரும்போதெல்லாம் நண்பன் சேகருக்கு அலைபேசுவேன்.
அறிவாளி என்பதோடு நேர்மையான மனிதன்.
அவனிடம் என் வருத்தத்தைச் சொன்னவுடன் அருவியாய் கொட்ட ஆரம்பித்தான்:
“நானும் அது போன்ற செய்திகளை பார்த்தேன். எல்லோருக்குமான ஜோக்கர் படத்தை ஒரு குறிப்பிட்ட சாதிக்கான படமாக சிலர் செய்தி பரப்புவது வருத்தமான விசயம்தான்.
இதற்கான காரணம், மிக எளிதாக உணரக்கூடியதுதான்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்காக, “ஜோக்கர்” படம், திரையிடப்பட்டிருக்கிறது. படம் பார்த்த அவர் படத்தை புகழ்ந்திருக்கிறார். இதுதான், ஜோக்கர் படத்தை குறிப்பிட்ட தலித் சாதிக்கானவர்களின் படமாக சிலரை பார்க்க வைத்திருக்கிறது.
அதற்கு காரணமும் இருக்கிறது.
திருமாவளவனை அவரது கட்சியின் ஒட்டுமொத்த தலித் இன தலைவர் என்பதாக குறிப்பிட்டாலும், அவரது கட்சியில் கணிசமானோர் குறிப்பிட்ட தலித் மக்கள்தான். இதுதான் எதார்த்தம்.
தவிர, “மேல் சாதிக்காரனை வெட்டு.. மேல் சாதிக்காரியை கட்டு” என்கிற மாதிரியான திருமாவளவனின் வெறிப் பேச்சு, அவர் ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவர் என்பதாகவே பிறரை பார்க்க வைக்கிறது. அவரது ஆழ்ந்த படிப்பு, பொது சிந்தனை போன்ற ப்ளஸ்களை பின்னோக்கித் தள்ளிவிட்டது.
அவர் ஜோக்கர் படத்தை பார்த்து புகழ்ந்து பேசியவுடன், அந்த படத்துக்கும், சாதி முத்திரைகுத்துகிறார்கள் சில சாதிய அமைப்புகள்.
ஆனால், ஜோக்கர் படம், சாதியைச் சொல்கிறதா…?
நிச்சயமாக இல்லை…!
சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல.. பொருளாதாரத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்குமான படமாகத்தான் ஜோக்கர் எடுக்கப்பட்டிருக்கிறது.
பெரியார் சிலை முன்பு, சாதி மறுப்பு திருமணம் நடப்பதாக ஒரு காட்சி. இது ஒட்டுமொத்த சாதி மறுப்புக்கான விசயம்தானே தவிர, குறிப்பிட்ட எந்த சாதியையும் உயர்த்திப்பிடிக்கும் காட்சியா?
அப்படத்தின் அடிநாதம் ஊழல் எதிர்ப்புதான். ஊழல் என்பது எல்லா மக்களையும்தானே பாதிக்கிறது?
ஊழலுக்கு ஏது சாதி?
அதே நேரம் இன்னொரு விசயத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு படம் தயாரிப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. தயாரிப்பு தரப்புக்கு பல்வேறு நெருக்கடிகள் இருக்கும். அதில் ஏதோ ஒருவிதத்தில் திருமாவளவன் போன்றோர் பயன்பட்டிருக்கக்கூடும். அதனால் அழைத்திருக்கலாம்” என்ற சேகர், சற்றே நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான்:
“ஜோக்கர்” படத்தில் வரும் கதாநாயகன், மிக நல்லவன். அந்த கதாபாத்திரத்தை, அந்த படத்தை திருமாவளவன் பாராட்டுவதால், அவரும் “ஜோக்கர்” ஆகிவிட முடியாது. திருமா ஜோக்கர் அல்ல. விவரமானவர். தமிழர்க்காக குரல் கொடுக்கும் அவர்தான், தமிழின படுகொலைக்கு மூல காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சேவை பம்மி பயந்து வணங்கி, விருந்துண்டு வந்தார்.
ஆகவே இது போன்றவர்களை.. இன்னும் சொல்லப்போனால், எந்தவொரு அரசியல்வாதியையுமே ஜோக்கர் படம் பார்க்க அழைக்காமல் இருப்பதே அப்படத்தின் மீதான மரியாதையை தக்கவைக்கும்” அருவி மாதிரி கொட்டி முடித்தான் சேகர்.