மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஒரே ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டுவிட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதால், தனியாக போஸ்டர் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். 2022-ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன் என நிறைய முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன. அவர்களுக்கு இணையான கதாபாத்திரம், ஆழ்வார்க்கடியான் என்ற வைணவ சாமியாரின் கதாபாத்திரம். விஷ்ணு பக்தரான இவர் சோழர்களுக்காக உளவு பார்க்கிறவர்.

இந்த வேடத்தில் ஜெயராம் நடிப்பதாக தகவல். மொட்டைத் தலையும் பின்பக்கம் குடுமியும் கொண்டது ஆழ்வார்க்கடியானின் தோற்றம். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் ஜெயம் ரவி, கார்த்தியுடன் இருக்கும் ஜெயராம் மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறார். அதனை வைத்து அவர்தான் ஆழ்வார்க்கடியான வேடத்தை செய்வதாக கூறுகிறார்கள்.