பூலோகம் படத்தை அடுத்து இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணனுடன் இணைந்திருக்கிறார் ஜெயம் ரவி. ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘அகிலன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஏற்கெனவே அகிலன் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் படத்தலைப்பு குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரையில் பிரபலமான சரவணா மருத்துவமனையின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தற்போது மதுரை மாநகர் பாஜக தலைவருமான டாக்டர் சரவணன் நடித்த அகிலன் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.
‘சரித்திரம் பேசு’ படத்திலும் நடித்த டாக்டர் சரவணனின், ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஜெயம்ரவி நடிக்கும் படத்துக்கும் அதே தலைப்பை வைத்திருப்பது சர்ச்சை ஆகி உள்ளது.
இது குறித்து டாக்டர் சரவணன், “அகிலன் என்ற திரைப்படம் நான் நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. தற்போது அகிலன் 2 படத்தை தயாரிக்கும் பணி துவங்கி இருக்கிறது. படத்தின் தலைப்பை கில்டு அமைப்பிலும் பதிவு செய்துள்ளேன்.
இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கு என் படத் தலைப்பை சூட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஜெயம் ரவி ஆகியோர் படத்தின் பெயரை மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.