தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது, உடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர்தான் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எஸ்டேட்டில் ஓம் பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர் ஆகியோர் காவலாளிகளாகப் பணிபுரிந்து வந்தார்கள். கடந்த திங்கட்கிழமை இரவு, ஓம் பகதூர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர், படுகாயங்களுடன் கிடந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள முக்கிய ஆவணங்களை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் முயன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கிருஷ்ண பகதூரிடமும் விசாரணை நடந்தது. அதில் கொலை செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது.
கையுறை அணிந்துகொண்டு கொலை செய்ததாகவும், பிறகு கையுறயை எரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தக் கையுறையில் ஒரு விரல் பகுதி மட்டும் எரியவில்லை. அதை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, , கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் பொருந்தியது. ஆகவே கிருஷ்ண பகதூர்தான் கொலைக் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“கொலைக்கான காரணம் தெரியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் கிருஷ்ணபகதூரை கைது செய்து போலீஸ் காவலில் எடுக்கப்படுவார். அதன் பிறகு காரணம் தெரியவரும்” என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.