சென்னை,
டல்நலக்குறைவால் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் உடல்நிலை தேறியதை அடுத்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
கடந்த 58 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.  அப்பல்லோ மருத்து வர்கள் குழுவும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதுவரை அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகி வந்தன.
ஏற்கனவே கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி முதல்வர் உடல்நிலையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அதையடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறிவிட்டது; அவர் விரும்பும்போது வீடு திரும்பலாம் என கூறினார்.
இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சிறப்பு பூஜையில்,  சசிகலா நடராஜன் மற்றும் உறவினர்களுடன் சென்று வழிபாடு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை வார்டில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இங்கு கொஞ்சகாலம் சிகிச்சை எடுத்து, உடல்நலம் முழுமையான குணம் அடைந்தவுடன்தான்  வீட்டுக்கு திரும்புவார் என போயஸ்தோட்டத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.