சென்னை,
முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்பியதாக திமுக கவுன்சிலர் உள்பட 20 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ந்தேதி முதல் உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. 22 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் தீவிர கண்காணிப்பில்தான் இருக்கிறார்.
அவருக்கு லண்டன் சிறப்பு டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் மற்றும் அப்பல்லோ மருத்துவ குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஜெ. குறித்து அவ்வப்போது வதந்தி பரவி மக்களை பரபரப்புக்கு ஆளாக்குகிறது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.
ஏற்கனவே ஜெயலலிதா உடல்நிலை பற்றி பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில், கோவை அருகே உள்ள பொள்ளாச்சி நகராட்சி தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான கிருஷ்ணகுமார் அங்குள்ள போலீஸ் நிலையத்தில், முதல்வர் குறித்து சமுக வலைதளத்தில் அவதூறு பரப்புவதாக திமுக கவுன்சிலர் மீது புகார் மனு கொடுத்ததார்.
அதில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி நகராட்சி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், மாவட்ட இளைஞரணி செயலாளருமான நவ நீதகிருஷ்ணன் பேஸ்புக்கில், முதல்-அமைச்சர் உடல் நிலை பற்றி அவதூறாக ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார். அதனை ராஜீவ்காந்தி உள்பட 20 பேர் மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார், திமுக கவுன்சில்ர் நவநீத கிருஷ்ணன் உள்பட 20 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)-பிரிவினையை தூண்டி பிரச்சினை ஏற்படுத்துதல், 505(2)-பெண்களை இழிவாக பேசி அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.