சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, டெல்லியில் இருந்து வந்திருக்கும் மருத்துவர் குழுவினர் சுமார் இரண்டரை மணி நேரம் பரிசோதனை செய்தனர்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும்  தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் உடல்நிலை  குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த  மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
apollo
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார்.  அவரும் முதல்வர்  உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். மேலும் அப்பல்லோ மருத்துவ குழுவினரும் முதல்வரின் உடல்நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.
முதல்வரை பார்க்க தமிழக அமைச்சர்கள், கட்சி தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் தினசரி மருத்துவமனை வாசலில் காத்து கிடக்கின்றனர்.மேலும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பூரண குணம் அடைய தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது, மருத்துவர்களின்  தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அப்பல்லோ செய்தி குறிப்பு தெரிவித்து வருகிறது.
இன்று 15வது நாளாக முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர்  டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை  நிபுணர் டாக்டர் நிதிஷ்நாயக் ஆகியோர்  அடங்கிய மருத்துவ  நிபுணர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் அப்பல்லோ  மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்கள் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினர். இதுவரை அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து, மருத்துவ அறிக்கைகள் குறித்து ஆராய்ந்து ஆலோசனை நடத்தினர்.
மேலும், அடுத்த கட்டமாக முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். பல்வேறு பரிசோதனைகள் செய்தனர்.
நேற்று இரவு  10 மணியில்  இருந்து நள்ளிரவு 12.30 மணி வரை மருத்துவமனையில்  இருந்து சிகிச்சை அளித்தும், மேற்கொண்டு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகளை பற்றியும் அப்பல்லோ மருத்துவர்களிடம்  எடுத்து கூறினார்கள். அதன் அடிப்படையில் தற்போது  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.