தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
68 வயதான முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று அன்போடு அழைக்கப்பட்ட முதல்வர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி  காலமானார்.
இதற்கான அறிவிப்பை அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் உடலில் நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவருக்கு அப்பல்லோ மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
jeyalalitha
அதையடுத்து, மராட்டிய கவர்னரும், தமிழக பொறுப்பு கவர்னருமான வித்யாசாகர் ராவ் உடடினயாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்து சென்று, அறிக்கை வெளியிட்டார்.
அதுபோல அப்பல்லோ நிர்வாகமும் முதல்வர் உடல்நிலை குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது.
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு நுரையீரல் சம்பந்தமான சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே சென்னை வரவழைக்கப்பட்டார். அவர் அப்பல்லோ வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து சென்றார். 3 முறை அவர் சென்னை வந்து சிகிச்சை அளித்தார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்க, டில்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவ குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்தது. 3 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மேலும் கொடுக்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்தும், அப்பல்லோ மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து முதல்வருக்கு சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து பிசியோதெரபிஸ்டுகள் இருவர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜெயலலிதாவுக்கு பிசியோ தெரபி சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் உடல்நலம் குறித்து வதந்தி களும் பரவியது. தமிழக போலீசார் வதந்தி பரப்பியவர்களை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் காரண மாக வதந்திகள் பரவுவது தடுக்கப்பட்டது.
அகில இந்தியா காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உட்பட பல வி.வி.ஐ.பிகள் அப்பல்லோ வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரணை செய்து, முதல்வர் விரை வில் குணமடைவார் என்று கூறி சென்றனர்.
முதல்வர் உடல்நலம் பெற வேண்டும் என்றும் சர்வ மத பிரார்த்தனைகள் நடைபெற்றன. உலகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மசூதிகளில், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
அதிமுகவினர் நாடு முழுவதும் உள்ள ஆலயங்களுக்கு சென்று விசேஷ பிரார்த்தனை செய்து வந்தனர்.
தமிழக அரசியல் தலைவர்களும் அப்பல்லோ வந்து சென்ற னர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் முதல்வர் விரைவில் குணமடைவார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிவித்து வந்தனர்.
இதற்கிடையில் அப்பல்லோ நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டியும், முதல்வர் உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் விரும்பினால் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று தெரிவித்தார்.
அதற்கு தகுந்தாற்போல, நடந்து முடிந்த 3 சட்டசபை இடைத்தேர்தலிலும், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், கட்சி சின்னம் ஒதுக்க கோரிய கடிதத்தில், அவர் கைநாட்டு வைத்து கொடுக்கப்பட்டது.
1jeya
பின்னர் 3 தொகுதிகளிலும் அதிமுகவினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அவரது பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ‘மக்களின் பிரார்தனையால் விரைவில் நலம்பெற்று திரும்புவேன்’ என்று கடந்த 13-11/2016 அன்றைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அதில் ‘ஓய்வு நான் அறியாதது உழைப்பு என்னை நீங்காதது’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் உடல்நலம் சற்று தேறியதை தொடர்ந்து கடந்த நவம்பர் 25ந்தேதி செய்தியாளர்களுடன் பேசிய அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக ஸ்பீக்கர் உதவியுடன் பேசி வருகிறார் என்றும் கூறினார்.
முதல்வர் பூரண குணமடைந்தார் என்றும், தற்போது அவருக்கு நடப்பதற்கு தேவையான பிசியோதெரசி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை, ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அப்பல்லோவில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முதல்வருக்கு ‘கார்டியாக் அரஸ்ட்’ ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
jeya
அதன்பிறகு, அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு, ECMO பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து முதல்வர் மிகவும் சீரியசான நிலையில் இருப்பதாக அப்பல்லோ இரண்டாவது அறிக்கை வெளியிட்டது.
இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் அப்பல்லோவை சூழ்ந்துள்ளனர்.
அப்பல்லோ வளாகத்தில் சர்வமத பிரார்தனைகளில் அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில் சுமார் 11.30 மணி அளவில் முதல்வர் மரணத்தை தழுவினார் என்று உறுதிப்படாத தகவல்கள் வந்துள்ளது.
தகவலை கேட்டதும் அப்பல்லோ வளாகத்தில் உள்ள தொண்டர்கள் கதறி அழுதனர். முதல்வர் இறந்த செய்தி அறிந்ததும் அதிமுக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.