சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாளான டிசம்பர் 20ந்தேதி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார்.
இது தொடர்பான வழக்கில் வெற்றிவேலுக்கு சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமின் வழங்கி உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளுக்கு முந்தைய நாள் (டிசம்பர் 20ந்தேதி) மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது இந்த வீடியோ வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்ய போலீசார் வலைவீசினர்.
இந்நிலையில், தலைமறைவான வெற்றிவேல், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விடுமுறை கால நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த மனு ஜனவரி 3ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
ஆனால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
மேலும், தினமும் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி இரண்டு வாரம் கையெழுத்து போட வேண்டும் என்றும் கூறி உள்ளது.