சென்னை,

ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரிய வழக்கில் விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடம் ஆக்க கூடாது என அரசு ஆணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை, ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கு அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

போயஸ் தோட்ட சொத்து, சட்டப்படி தனக்கும் தன் சகோதரர் தீபக்குக்கும் சொந்தமாகிறது என்றும், எந்த நோட்டீசும் இல்லாமல் தனியார் சொத்தில் நுழைவதற்கு அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும், தங்கள் அனுமதியின்றி வேதா இல்லத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சுற்றுலாத் துறை வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.