சென்னை:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில், வரும் 28ந்தேதி சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.
விசாரணை ஆணையத்தில் சமீபத்தில் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ள சசிகலா, ஆணையத்தில் ஆஜராகிறவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய தனது வழக்கறிஞருக்கு ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதற்கு அனுமதி அளித்த ஆணைய நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணனிடம் குறுக்கு விசாரணை செய்யும்படி சசிகலா வழக்கறிடம் கூறினார்.
ஆனால், அவரோ, இதுகுறித்து சசிகலாவிடம் தெரிவித்து அவரது கருத்தை பெற வேண்டியிருப்பதால் ஒரு வாரம் காலஅவகாசம் வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு ஆணைய நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
அப்போது சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், ‘சாட்சியம் அளிப்பவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணை செய்வது என்பது இயலாது. சசிகலாவிடம் இருந்து பதில் பெற்ற பின்னரே குறுக்கு விசாரணை செய்ய முடியும்’ என்றார்.
இதையடுத்து, ‘ஏற்கனவே ஆஜரான சாட்சிகளின் வாக்குமூலங்கள் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த தயாராக இருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தயாராக இருப்பதாக சசிகலா தரப்பு வக்கீல் கூறினார்.
அதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக 28-ந் தேதி அரசு மருத்துவர்கள் பாலாஜி, விமலா, டிட்டோ, தர்மராஜன், முத்துசெல்வம், கலா, நாராயணபாபு ஆகிய 7 பேரை சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்காக அன்றைய தினம் ஆணையத்தில் ஆஜராக அரசு டாக்டர்கள் 7 பேருக்கும் நீதிபதி உத்தரவின்பேரில் சம்மன் அனுப்பப்பட்டது.