பாண்டிபஜாரில் பெண் வேடமிட்டு கொள்ளையடிக்க முயன்ற கொத்தனாரும், என்ஜினியரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் மூன்றடுக்கு கொண்ட வணிகவளாகம் மற்றும் குடியிருப்பில்  தரைதளத்தில் மனைவி, மகள், மருமகன் பேரக்குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார் ராதாகிருஷ்ணன்(வயது 74).   இன்று வீட்டில் ராதாகிருஷ்ணனும் அவரது மனைவியும் மட்டும் இருந்தனர்.  அப்போது ஒரு ஆணும், பெண்ணும் வந்து, வீடு வாடகைக்கு இருக்குமா என கேட்டுள்ளனர்.

ராதாகிருஷ்ணன் பதில் சொல்வதற்குள், அவரை கீழே தள்ளிவிட்டு,  பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளனர்.  சத்தம் கேட்டு வந்த ராதாகிருஷ்ணனின் மனைவி முகத்தில் பிளீச்சிங் கரைசல் நனைத்த துணியை போட்டு பொத்தினர்.

ஆனாலும் தம்பதியர்  சத்தம் போட்டுள்ளனர்.

இதப்பார்த்து காம்ப்ளக்ஸ்க்கு வந்த வாடிக்கையாளர்கள் வந்திருக்கிறார்கள்.

இதையடுத்து அந்த ஆணும், பெண்ணும் ஓடியிருக்கிறார்கள். அவர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களைப் பிடித்தவுடன்தான், சுடிதார் அணிந்திருந்தவர் பெண் அல்ல ஆண் என்பது தெரியவந்தது.

பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இருவரும் விசாரிக்கப்பட்டனர். ஒருவர் பெயர் பிரகாஷ்(27) என்பதும், சிவில் என்ஜினியரான இவர் திண்டிவனத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

பெண் வேடமிட்ட நபர் பெயர் சுஜந்த்(19)  கொத்தனாரான இவர்  திண்டுக்கல், குறும்பட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன் ராதாகிருஷ்ணன் வீட்டில் சுஜந்த் கொத்தனார் வேலை பார்த்திருக்கிறார். வீட்டில் முதிய தம்பதி மட்டுமே இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளையிட முயற்சித்திருக்கிறார். இதற்கு பிரகாஷூம் ஒத்துழைத்திருக்கிறார்.

இருவரிடமும் இரண்டு சிறிய கத்திகளை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.