சென்னை: அதிமுகவிலும், ஜெயலலிதா மரணத்திலும் ஏராளமான குளறுபடிகள் நீடித்துவரும் நிலையில், ஜெயலலிதா வெளிநாடு சிகிச்சை வேண்டாம் என கூறினார், என அவர் மறைந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சசிகலா புதிய புருடா விட்டுள்ளார். ஜெயலலிதாவின் மர்ம சிகிச்சை மற்றும் மர்ம மரணத்துக்கு சசிகலா மட்டுமே காரணம் என குற்றம்சாட்டப்படும் நிலையில், தற்போது, ஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை’ , அவர்தான் வெளிநாடு சிகிச்சை வேண்டாம் என மறுத்தார் என சசிகலா தெரிவித்து உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் மர்மமாகவே கழிந்தது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் உள்ள காமிராக்கள் அகற்ற கூறிய நிலையில், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, அப்போது டம்மி முதல்வராக இருந்த ஓபிஎஸ் மற்றும் தலைமைச் செயலாளர் மற்றும் கட்சி தொண்டருக்கு கூட தெரிவிக்காமல் தான் மட்டுமே ஜெயலலிதாவுடன் இருந்து வந்து, அவரது மர்ம மரணத்துக்கு காரணகர்த்தாக அமைந்தவர் சசிகலா. ஆனால், ஜெ.மறைந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புதுப்புதுக் கதைகளை அளந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா சினிமாவில் நடித்து வாங்கிய சொத்துக்களை, அவரிடம் இருந்து அபகரித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் சசிகலா, தனது சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள அரசியல் களத்தில் குதித்து ஜாதி ரீதியிலான ஆதரவினை பெற்று வருகிறது.
இவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லம் ஒன்றில் றிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி இன்று கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, பல்வேறு புதிய தகவல்களை வெளியிட்டு, தன்னை மிகச்சிறந்தவராக காட்ட முனைந்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிகலா, ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் இருந்து சிறைக்கு வந்த கடிதத்தில், நேரில் வந்து பதில் அளிக்கலாம், வழக்கறிஞர் மூலம் பதில் அளிக்கலாம், எழுத்துபூர்வமாக பதில் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் நான் மூன்றாவது முறையை தேர்வு செய்தேன். அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். நாங்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் ஆசைப்பட்டோம். ஆனால், ஜெயலலிதா வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். சென்னையில் இல்லாத சிகிச்சை முறைகளே இல்லை. அதனால் வெளியில் இருந்து மருத்துவர்களை இங்கே கூப்பிடலாம் எனச் சொன்னார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்து பார்த்துச் சென்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது, எய்ம்ஸ் மருத்துவர்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே?. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் தினமும் வந்து ஜெயலலிதாவை பரிசோதனை செய்து அறிக்கை கொடுத்தார்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினார்.
மேலும் நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன் என்றவர், நான் இருக்கும் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள் என்றும், அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன் என்றார்.
மேலும், அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது, ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் என்று கூறியவர், தனக்கு பின்னால் யார் வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும். அதனால்தான் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கி உள்ளேன் என்றார்.
திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. எதிர்க்கட்சி என்பதால் மட்டுமே எதற்கெடுத் தாலும் திட்டுவதில்லை. என் அறிக்கைகளை பார்த்தாலே தெரியும். அறிவுப்பூர்வமான விஷயங்களை மட்டுமே கூறி வருகிறேன். திமுக கொடுத்த வாக்குறுதிகளை செய்ய வேண்டும். விளம்பரம் செய்வது மட்டுமே ஆட்சி இல்லை. மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். இல்லை என்றால் மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சசிகலா, தமிழக அரசில் நான் நேரடியாக அமைச்சராக எம்.எல்.ஏவாக இல்லை என்றாலும் கூட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து 24 மணி நேரமும் மக்களுக்கு என்ன செய்தால் நல்லதாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டுதான் இருப்பேன். ஜெயலலிதாவுடன் இருந்து ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். நாங்கள் இருவரும் அதிகம் பேசியுள்ளோம். அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.