சென்னை,

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்காக வாரிசுதாரர்கள் உரிமை கோரினால் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சிவிசண்முகம் கூறினார்.

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், ஜெ. வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இதற்கு ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக் மற்றும் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வேதா நிலையம் வீடு எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதே நேரத்தில் நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

ஆனால், தீபாவோ, சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி உள்ளார்.

இந்நிலையில், போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  போயஸ் இல்லத்திற்கு, வாரிசுதாரர்கள் உரிமை கோரினால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.