பன்னெடுங்காலமாகவே தமிழகத்தில ஒரு துயரான வழக்கம் உண்டு. பெருந்தலைவர்கள் மறைந்தால், தொண்டர்கள் தீக்குளித்தும், தூக்கிட்டும் தற்கொலை செய்துகொள்வதுதான் அது.
1
“மிகச் சிறந்த தலைவர்கள் மறைந்தாலும், மக்கள் அவர் மீது மிகுந்த பற்று வைத்திருந்தாலும் உலகின் வேறு பகுதிகளில் இது போல் நடப்பதில்லை” என்று வருத்தத்துடன் சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு.
தமிழறிஞர் க.ப.அறவாணன் அவர்களின் நூல் அளிக்கும் தகவல் அதிர வைக்கும் உண்மைகளைச் சொல்கின்றன:
“முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது துயரம் தாங்காமல் 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களில் 15 பேர் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள். மேலும்,  ஒரிசாவைச் சேர்ந்த ஒருவரும் மலேசியாவைச் சேர்ந்தமற்றொருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் தமிழர்களே.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது தற்கொலை செய்தகொண்ட 9 பேரும் தமிழர்களே.
முதல்வர் எம்.ஜி.ஆர். இறந்தபோது 26 தமிழர்கள் தங்களை மாய்த்துக் கொண்டனர்.  தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது 48 தமிழர்கள் தற்கொலை செய்துகொண்டனர். கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி காஞ்சி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது 2 தமிழர்கள் தற்கொலை செய்துகொண்டனர்” என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறார் க.ப. அறவாணன்.
இந்த சூழலில் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவில் மிகுந்த சோகத்துக்கிடையே ஒரு விதத்தில் நாம் நிம்மதி அடையும் செயலும் நடந்திருக்கிறது.
ஆம்.. பெருந்திரளான அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் தலைவியான ஜெயலலிதா மீது பேரன்பு வைத்திருந்தார்கள், வைத்திருக்கிறார்கள்.
ஜெயலிலதா மருத்துவனையில் சேர்க்கப்பட்டவுடனே, அங்கு கூடி பிரார்த்தனை செய்தார்கள். கதறினார்கள். மருத்துவமனை வளாகத்தில் மட்டுமல்ல.. தமிழகம் முழுதும் அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் ஜெயலலிதா நலம்பெற வேண்டுதல் நடந்தது.
அந்த வேண்டுதல் பலிக்காத நிலையில், ஜெயலலிதா மறைந்ததும் தொண்டர்கள் கதறிய கதறல்களை தொலைக்காட்சிகளில் நாம் பார்த்தோம். அவர்களின் அழுத முகமும் கதறலும் மறக்க முடியாது.
மற்ற தலைவர்கள் மீது அவர்களது தொண்டர்கள் எப்படி மாறா அன்பு வைத்திருந்தார்களோ, வைத்திருக்கிறார்களோ.. அதே போல ஜெயலலிதா மீதும் பெரும் திரளான தொண்டர்கள் பேரன்பு வைத்திருந்ததை நாம் உணர முடிந்தது.
ஆனால், ஒருவர்கூட இந்த மறைவுக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை. தங்கள் தலைவிக்காக மனப்பூர்மாக அஞ்சலி செலுத்துவதன் மூலமே தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
கடந்த சில பல ஆண்டுகளாக நிலவி வந்த தமிழக அவலம் ஒன்று, தனது மறைவின் போது நடக்கவில்லை என்கிற திருப்தியுடனேயே ஜெயலலிதா விண்ணுலகம் சென்றுள்ளார்.
அதே போல, பொதுவாக தலைவர்களின் மறைவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் என்பதும் தமிழக  நிதர்தனம். அது போன்ற சம்பவங்களும் நடக்கவில்லை
ஆம், தனது மறைவில், தமிழகத்தை தலைநிமிரச் செய்திருக்கிறார்.  அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தவே செய்கிறது. பெரும் இழப்புதான்.
ஆனால் தான் வாழ்ந்தபோது தமிழகத்தை பெருமைப்படுத்தும் விதமாக, தலைநிமிரவைக்கும் விதமாக அவர் பல செயல்களைச் செய்திருக்கிறார்.
தனது மறைவிலும் அப்படியோர் விசயத்தைச் செய்திருக்கிறார்.
அவரது ஆத்மா சாந்தி அடைவதாக.