சென்னை,

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை மையத்தில், அப்பல்லோ மருத்துவமனை கண்காணிப்பாளர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மரணமடைந்தாக அறிவிக்கப்பட்ட அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலமில்லாமல் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்பட்டது.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி அதிமுகவினரும் போர்க்கொடி தூக்கினர்.

அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஜெ.மரணம் குறித்து விசாரணை செய்து அறிக்கை கொடுக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையம் கடந்த மாதம் தனது விசாரணை முடுக்கி விட்டுள்ளது.  ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு வார கால அவகாசம் கோரி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்த மருத்துவரான சுதா சேஷையன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து இன்று  அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர்  டாக்டர் சத்யபாமா விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா சிகிச்சை  தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஜனவரி 12-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.