ஜெயலலிதா உடல் நலிவுக்கு இதுவும் ஒரு காரணமா?

Must read

நியூஸ்பாண்ட்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறுவிதமான செய்திகள், சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், “அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடையேயான போட்டியும், அவரது உடல் நலிவுக்குக் காரணம்” என்ற பேச்சு கிளம்பி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
“ஜெயலலிதா, சர்க்கரை (நீரிழிவு) நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சையும் எடுத்து வந்தார். ஜெயலலிதாவின் உடல் நிலை, அவரது உணவுப் பழக்கம் ஆகியவை குறித்து நன்கு அறிந்த மருத்துவர், இதற்காக சிகிச்சை அளித்து வந்தார். தகுந்த மருந்து மாத்திரைகள் அளித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த (2015) டிசம்பர் மாதம், சென்னை உட்பட சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அப்போது  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது தொகுதியான சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் வெள்ள சேதத்தை பார்வையிட்டார் ஜெயலலிதா.  அப்போது அவரது காலில் நீர்த் தொற்று காரணமாக சிறு புண்கள் ஏற்பட்டன. (சேற்றுப்புண் போல.)

அவருக்கு ஏற்கெனவே கடுமையான சர்க்கரை நோய் இருந்ததால், புண் பாதிப்பு அதிகமானது. இந்த சேற்றுப்புண் ஆறுவதற்காக, ஜெயலலிதாவுக்கு ஒரு புதிய மருத்துவர் சிகிச்சை அளிக்க  வந்தார்.
இந்த புதிய மருத்துவர், ஜெயலலிதாவின் சர்க்கைரை நோய் சிகிச்சைக்கும், தனக்கு வேண்டிய நீரிழிவு நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.
இடையில் தானாக முன்வந்து, ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வந்த பழைய மருத்துவரை இந்த புதிய மருத்துவக்குழு தவிர்த்தது.
ஆனால், முந்தைய மருத்துவர் போல இந்த புதிய மருத்துவக்க குழுவுக்கு  ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ( பேஷண்ட் ஹிஸ்டரி)  முழுமையாக தெரியவில்லை.   தவிர ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம் குறித்தும்  இவர்கள், கவனம் செலுத்தவில்லை.
“இந்த அளவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், இந்த அளவிலான (டோஸ்) மருந்து அளிக்க வேண்டும்” என்ற தட்டையான மருத்துவவிதியின்படி மருந்து மாத்திரைகள் அளித்தது புதிய மருத்துவக் குழு.
இந்த புதிய மருந்துகள் ஜெயலலிதாவின் நீரழிவு நோயை, கட்டுப்படுத்த தவறிவிட்டது. சர்க்கரை நோயின் பாதிப்பு மிக அதிககமாகிவிட்டது. இதுவே அவரது, உடல் நிலை நலிவுற முக்கிய காரணமாக அமைந்து, அவரை மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது.
ஆக, ஜெயலலிதாவுக்கு யார் சிகிச்சை அளிப்பது என்ற போட்டியும் அவரது உடல் நலிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது!” – இதுதான் விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்.
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கெனவே அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள் குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. ஆகவே கடைசி சில மாதங்களில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை, அளிக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழக்கூடும்.

More articles

Latest article