ஞ்சாவூர்

ஞ்சை நகர் மேலவீதியில் கழிவுநீர் காவாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோவில் இடித்து அகற்றப்பட்டது.

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் ஒரு பகுதியாகச் சாலை மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது.  இந்த  பணிகளில் தஞ்சாவூரில் உள்ள தேரோடும் வீதிகளில் சாலைகளைச் சீரமைத்து, மழைநீர் வடிகால்கள் கட்டி, அவற்றின் மீது நடைபாதைகள் அமைக்கும் பணிகளும் ஒன்றாகும்.

இதையொட்டி தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.  தஞ்சாவூர் மேல வீதியில் கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர்  ஜெயலலிதா உருவப்படம் வைத்து கோயில் கட்டப்பட்டிருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் கவுன்சிலரும் கோட்டை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளருமான சுவாமிநாதன் இந்த கோவிலைக் கடந்த 2017-ம் ஆண்டு கட்டி உள்ளார்.

தஞ்சை மாநகாராட்சிக்கு ஜெயலலிதா கோயில் கழிவு நீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து, அந்தக் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் நேற்று முன்தினம் இடித்து அகற்றினர்.