சென்னை:  நிலம் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து, தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளை கைது செய்ய உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து,  இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரதீபா மற்றும் மருமகன் நவீன்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் கேட்டு ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், ஆலந்தூர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அவரது மனுவில், இந்த சம்பவத்தின்போது, தான் மைனராக இருந்ததால் தந்தையும், சகோதரர் மகேசும் மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்ததாகவும், தந்தை மறைவிற்குப் பிறகு மகேஷ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உரிமையியல் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான வழக்கில், இந்த விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே இதனால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30ம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அதுவரை ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியாவை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.