அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், இடுகம்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது.
இக்கோயில் உள்ள கல்வெட்டில் கலி 4404-ல் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளதாக இருப்பதாலும், சிவன் பார்வதி கோயில் சுவரில் மீன் சின்னங்கள் பொறிக்கப் பட்டிருப்பதாலும், இக்கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். பெரும்பாலும் ஆஞ்சநேயர் உருவச் சிலைகள் வலதுபுறமாகவோ அல்லது இடதுபுறமாகவோ திரும்பி நின்று கொண்டு கையில் கதை அல்லது சஞ்சீவி மலையை தாங்கியவாறு இருப்பதாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயர் இரு கால்களிலும் தாமரை மலர் போன்ற தண்டையும், வலது கையில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்ட நிலையில் ஆசீர்வாதம் செய்யும் வகையிலும், இடது கையில் சவுகந்திக மலருடனும், வாலின் நுனி தலைக்குப்பின்புறம் மணியுடன் நேராக நிமிர்ந்து அனைத்து உயிர்களையும் கனிவோடு நோக்கும் கருணை விழிகளுடன் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயர் கோயிலுக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதில் பூமியிலிருந்து மேலெழுந்த ஒரு நீள்வடிவ சுயம்பு பாறையில் விநாயகர், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் காமதேனு ஆகிய ஆறு வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் தெற்கே விநாயகர் கோயிலும், கன்னிமூலையில் இராமலிங்கேஸ்வரர் கோயிலும், அதனை ஒட்டி வடபுறம் செல்வமுத்துக்குமரன் கோயிலும், அதற்கு அருகில் பர்வதவர்த்தினி அம்மன் கோயிலும் ஒன்றை ஒன்று அடுத்தடுத்து ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் இந்தக் கோயிலைச் சுற்றி இருக்கின்றன. ஆக மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளையும் பெற்றது இக்கோயில். இப்பகுதியில் மூன்று சித்தர்கள் வாசம் செய்து கொண்டு இருப்பதால் அருள் மணமும், சக்தியும் நிறைந்துள்ளதாக பெரியவர்கள் கருத்து தெரிவித்தனர். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலை இராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.
நவ கிரக பீடைகள் நீங்கி மும்மூர்த்தி அனுகிரகம் ஒன்று சேர கிடைப்பதாக ஐதீகம். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தையும், திருமணம் மற்றும் சுபகாரியங்கள் உடனடியாக நடைபெறும்.
கோயிலுக்கு வரும் தாய்மார்கள் தங்கள் வீடுகளில் ஒவ்வொரு நாளும் உணவு சமைக்க அரிசி எடுக்கும் போது ஆஞ்சநேயரை நினைத்து ஒரு கைப்படி அரிசியை எடுத்துத்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைப்பார்கள். இவ்வாறு 30 நாட்கள் எடுத்து வைத்த அரிசியை கோயிலிற்கு கொண்டு வந்து சேர்க்கும் போது பல மூட்டை அரிசியாக சேர்கிறது. இதன் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது.