சென்னை:
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிக்க மாநில அரசு சார்பில் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த மருத்துவர்களில் 4 பேர் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என, விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வருகிறது. தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கண்காணிக்க அரசு சார்பில் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், தர்மராஜன், பொது மருத்துவத் துறை பேராசிரியர், டிட்டோ, நுண் துளை அறுவை சிகிச்சை நிபுணர், பாலாஜி ஆகியோர், இடம் பெற்றிருந்தனர்.
குழு ஒருங்கிணைப்பாளராக பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தான் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் அங்கிகார படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றவர்.குழுவில் இடம்பெற்ற இருந்த மருத்துவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
முதல் நாள் விசாரணையில், கலா, முத்துசெல்வன் ஆகியோர் ஆஜராகினர். மறுநாள் விசாரணையில், மருத்துவர் டிட்டோ, தீபாவின் கணவர் மாதவன் ஆகியோர் ஆஜராகினர். தொடர்ந்து மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணையில் கண்காணிப்பு குழுவில் இருந்த 5 மருத்துவர்களில் பாலாஜி தவிர, மற்ற 4 பேரும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெலலிதாவை சந்திக்கவே இல்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘ அப்பல்லோ மருத்துவமனையில் எங்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தினமும் அங்கு வந்து அமர்ந்திருப்போம். அவ்வப்போது வெளியிடப்படும் மருத்துவ செய்திக் குறிப்பை ஒருவர் படித்துக் காட்டுவார். தினமும், அந்த அறையில் அமர்ந்து விட்டு, மாலையில் திரும்பி விடுவோம். ஒரு நாள் கூட ஜெயலலிதாவை சந்தித்தது இல்லை’’ என்று தெரிவித்திருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெலலிதாவிடம் கைரேகை பெற்றபோது தானும், சசிகலாவும் மட்டுமே, அந்த அறையில் இருந்ததாக, மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் மட்டுமின்றி, வேலூர், ஐதராபாத், பெங்களூரு பகுதியிலிருந்தும், சிறப்பு மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்ததாக, இவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியூர் மருத்துவர்களை அழைத்து வரும் பணியை பாலாஜி மேற்கொண்டார். எய்ம்ஸ் மருத்துவர் கிலானியை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதாக, பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவிடம், மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்லலாம் எனக் கூறியபோது, அவர் வர மறுத்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜியை மட்டும் மீண்டும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.