ஸ்ரீநகர்:

அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டில் அமைதிகாக்கும் பிரதமர் மோடியின் ஊழலுக்கு எதிரான கோஷம் வெறும் கண்துடைப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் கூறுகையில், ‘‘பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு தொடர்புள்ள ஒரு தொழிலில் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருப்பது குறித்து உடனடி விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். மேலும், பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு ஊழலை கண்டுபிடிக்க தவறிய ஒரு பிரதமரால் எப்படி நாட்டை பாதுகாக்க முடியும். ஒவ்வொரு ஊழலிலும் பிரதமர் மோடி அமைதியை கடைபிடித்து வருகிறார்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ ஊழலுக்கு எதிரான பிரதமர் மோடியின் கோஷம் வெறும் கண்துடைப்பா கும். வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறை, சிபிஐ ஆகியவற்றை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற வேண்டும். இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஊழல் தலைவர்களுக்கு எதிராக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது.

பாகிஸ்தானில் கூட பனாமா பேப்பர் கசிவு வழக்கில் பிரதமரை பதவி விலக செய்துள்ளது. நம் நாட்டில் ஒரு ஃஎப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. பாகிஸ்தானிடம் இருந்து மோடி பாடம் கற்க வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் விசாரணைக்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்தள்ளனர். பாஜக.வும் ஊழலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்தது ஏன்? என்று அரசு பதில் கூற வேண்டும். ஜெய்ஷாவை பாதுகாக்க மத்திய அரசின் கூடுதல் வக்கீல் துசர் மேத்தா முயற்சி செய்தது மக்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டிலேயே தற்போது தான் முதன்முறையாக நடந்துள்ளது. பாஜக தலைமையும், ஆர்எஸ்எஸ்.ஸூம் மக்களை சூறையாடி நாட்டை காலியாக்குகின்றன’’ என்றார்.

அஜோய்குமார் தொடர்ந்து கூறுகையில், ‘‘கறுப்பு பணத்தை வெள்ளையாக்குகிறோம் என்று கூறி அறிவி க்கப்பட்ட பணமதிப்பிழப்பு மிகப்பெரிய மோசடியாகும். தேச பற்று என்ற பெயரில் உலகிலேயே இது தான் மிகப்பெரிய பண மோசடியாகும். சொத்து மதிப்பு உயர்வை வெளியிட்ட இணையதளத்திற்கு எதிராக ஜெய்ஷா நீதிமன்றத்தை நாடியிருப்பது நல்ல விஷயம். நீதிமன்றம் ஆதாரங்கள் மூலம் செயல்பட்டால் அனைத்து விஷயங்களுக்கும் தெளிவு ஏற்படும்’’ என்றார்.