ற்போது இணையத்தில் பெருமளவில் பேசப்படும் விஷயம், “பிரபல பாடலாசிரியர் நா. முத்துக்குமார், மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டாராமே” என்பதுதான்.
இந்த மஞ்சள்காமாலை  நோய் பற்றி அனைவரும் அறிந்துகொள்வது அவசியம்.
கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்று காரணமாக மஞ்சள்காமாலை ஏற்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும், ‘கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ’ என்ற வைரஸால் தாக்கப்படுபவர்கள்தான்  அதிகம்.  இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.  பெரியவர்களையும் விட்டுவைக்காது.
c1
காரணம் என்ன…
சுகாதாரமில்லாத குடிநீர், உணவு ஆகியவை மூலமாக இந்த  வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. ரத்தம் செலுத்தும் போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவும்.   இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த முதல் இரு வாரத்துக்குள் மஞ்சள் காமாலை தோன்றும்.  இதையெல்லாம்விட.. தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட வழிவகுக்கிறது.
a
அறிகுறி என்ன..
இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும். கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.  மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமம் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
ரத்தப் பரிசோதனையின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த வைரசுக்கு எதிரான “எதிர்ப்பாற்றல் புரதத்தின்” அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம். மேலும் கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்திருக்கும். ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்ததாக, வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறியலாம்.
என்ன செய்ய வேண்டும்..
மஞ்சள் காமாலை என்று தெரிந்த உடன் முறையான சிகிச்சை மற்றும் பத்தியம் மேற்கொள்வது மிக அவசியம். உணவுக் கட்டுப்பாட்டு மிக மிக அவசியம்.
கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறும் வாய்ப்புண்டு.  மேலும் கல்லீரல் செயல் இழந்து போகும் நிலையும் ஏற்படலாம். ஆகையால் கவனம் தேவை.
d
தடுக்க வழி…
மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை திரும்பிக்கூட பார்க்கக்கூடாது.  வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
அனைவருமே சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும். ஈக்கள் அண்டாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும்.  தண்ணீர், பால் போன்றவற்றை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு குடிக்க வேண்டும்.
மிக மிக மிக முக்கியமானது…  கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். ஒவ்வொரு துளி மதுவும், எமன். மேலும், கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை தவிர்க்க வேண்டும். . நோய் முழுமையாக  குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறுவது அவசியம்.
சாப்பாடு என்ன..
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்று மாதங்கள் வரை பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும்.   மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமையலில் அதிக எண் ணெய்  கூடாது.
மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் தவிர்க்க வேண்டும். முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது.  மாவுச் சத்து உள்ள உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் மூன்று இளநீர் குடிக்க வேண்டும். மோர், முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
f
நாட்டு வைத்தியம்
காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வரலாம்.
சுக்காங்கீரை ஒரு கைப்பிடி, சீரகம் 20, சிறிய வெங்காயம் 1, எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிடலாம்.
செலரிக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல்  அசதி மறையும்.
துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய் களை தடுக்கலாம். இதை அனைவருமே செய்யலாம்.
நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு
சேர்த்து அரைத்து, மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளையும் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
நொச்சி இலைகளை நன்றாக அரைத்து சாப்பிட்டால் ஈரல் வீக்கம் குறையும்.
பொன்னாங்கண்ணிக் கீரையைப் பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய் தீரும்.
பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம்  குணமாகும்.
– இனியா