சென்னை: வரும் 17ந்தேதி எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக தலைமைக்கழகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஜனவரி 17 ஆம் தேதி அதிமுக நிறுவன தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவச் சிலைக்கு, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் ம்.ஜி.ஆர். அவர்களின் 105-ஆவது பிறந்த நாளான 17.1.2022 – திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு,சென்னை ராயப்பேட்டை,அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் – எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,கழக ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம்,கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில்,சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள்,மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள்,கழக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக,ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள்,மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்,தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும்,புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளான 17.1.2022 அன்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவுகளை எப்பொழுதும் நெஞ்சில் சுமந்துள்ள,மாவட்ட,ஒன்றிய,நகர, பேரூராட்சி,கிளை,வார்டு,மாநகராட்சிப் பகுதி,வட்ட அளவில்,கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஆங்காங்கே அமைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி,கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா,மகாராஷ்டிரா,கேரளா,புதுடெல்லி,அந்தமான் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.1.2022 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவச் சிலைகளுக்கும்,அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்வதோடு, மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.