ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து உருண்ட  விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாவட்டம் பூஞ்ச் மாவட்டம் சாவ்ஜியன் பகுதியில் இன்று காலை நிறைவான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த  மினி பேருந்து எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாவ்ஜியன் பகுதியில் இருந்து மண்டிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், ராணுவத்தினரும் விரைந்து வந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளதாகவும், 8 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மண்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில், பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனை அளிப்பதாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.