சென்னை

சென்னையில் அமைதியாக நடைபெற்று வந்த அறப்போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றியதால் போராட்டம்  திசை மாறி செல்கிறது.

சென்னையில் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

மெரினாவில் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை போலீசார் வெளியேற்றியதால், இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினாவில் போராடுபவர்களுக்கு எடுத்து செல்லப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் பாட்டல்களை போலீசார் பறிமுதல் செய்தால், தற்போது  கடல் வழியாக படகு மூலம் உணவு எடுத்து வந்து உணவு வழங்கும் பணியை அப்பகுதி மீனவர்கள் செய்து வருகிறார்கள்.

 

சென்னையில் பொது மக்கள் கொந்தளிப்பு  ஆங்காங்கே பொது மக்ககளும் அமர்ந்து சாலை மறியல்.  சென்னை ராயப்பேட்டையில் பேரணியாக சென்ற இளைஞர்கள் மீது தடியடி.

சென்னையில்,  அவ்வை சண்முகம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர்.

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.

மெரினாவை நோக்கி வரும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டடுள்ளது.

மெரினாவில் நடைபெற்ற கலவரம் காரணமாக  5 போலீசார் காயம் அடைந்தனர். போலீசார் வானத்தை நோக்கி  துப்பாக்கியால் சுட்டனர். தற்போது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மாணவர்களின் ரெயில் மறியல் போராட்டம் காரணமாக  சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடல் மா ர்க்கமாக படகுகள் மூலம் அருகில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் போராட்டத்தில் கைகோர்த்து உள்ளனர்.  தொடர்ந்து மக்கள் கூட்டம் வந்துக்கொண்டே  இருக்கிறது.

மெரினாவில் கடலில் இறங்கி போராடி வரும் மாணவர்களை  கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம்  கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மாணவர்களை தாக்கியதால் மதுரையில் தமுக்கம் மற்றும் செல்லூர் ரயிலை மறித்தும் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகிம்சை வழியில் சென்றுகொண்டிருந்த அறவழிப்போராட்டம் தற்போது வன்முறை பாதைக்கு திரும்புகிறது.  இதற்கு யார் பொறுப்பு…..?