சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பு நடைபெறலாம் என தெரிகிறது.

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வழக்கமாக சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் குடியரசு தின விழா அணிவகுப்பு இந்த நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.
சென்னை மெரினால் நடைபெற முடியாவிட்டால் மாற்று ஏற்பாடாக நேரு ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் கூறுகிறது.

வரும் வியாழக்கிழமை (ஜனவரி 26) அன்று இந்திய குடியரசு தினம். அன்று இந்தியா முழுவதும் பள்ளி மாணவ மாணவியர்களின் நடனம், கலை நிகழ்ச்சிகள், போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களின் அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம்.

 

தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா சென்னை கடற்கரையில் உள்ள ஐ.ஜி.அலுவலகம் எதிரே நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கடற்கரை சாலையில் நடைபெறுவது சந்தேகம் என தெரிகிறது.
கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினா கடற்கரையில் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சென்னை கடற்கரை சாலை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
இதன் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு சென்னை சென்ட்ரல் அருகே உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடத்த உத்தேசித்துள்ளதாக தலைமை செயலக வட்டாரம் கூறுகிறது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது. பொதுவாக குடியரசு தின விழா அணிவகுப்பை காண ஏராளமான பொதுமக்கள் வருவது வழக்கம். அவர்களுக்கு எப்படி வசதி செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் பள்ளி கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஏற்கனவே தயார்நிலையில் இருப்பதாகவும், பொதுவாக வரும் 24ந்தேதி வரை கடற்கரை சாலையில் ரிகர்சல் நடைபெறும். ஆனால், தற்போது போராட்டம் காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், தற்போது தமிழ்நாட்டுக்கு தனிப்பட்ட கவர்னர் இல்லை என்பதால், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று தேசியை கொடியை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமே ஏற்றுவார். தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் நடைபெறும் விழாவில் கொடியேற்ற இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்திதாளில் வெளியாகி உள்ளது.