ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு:  உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு!

Must read

ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகத்தில் போராட்டம் வெடித்துவரும் நிலையில்,  அது தொடர்பான தொடர்பான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டை தடை செய்து பல்வேறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வந்தன. இருப்பினும் இடைக்கால உத்தரவுப்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தநிலையில், கடந்த 2011இல் மத்திய அரசு, காட்சிப்படுத்த தடை விதிக்கும் அரசாணையில் சிங்கம், புலி, கரடி, குரங்கு உள்ளிட்ட விலங்குகளோடு, காளையையும் சேர்த்தது.

இதன்படி,  ‘காட்சிப்படுத்த தடை’ விதிக்கப்பட்ட  இந்த விலங்குகளை எக்காரணம் கொண்டும் யாரும் காட்சிப் பொருளாகவோ, வித்தைகாட்டும் விலங்காகவோ, சண்டையிடவைத்தோ மக்களிடம் காட்டக் கூடாது என்று அறிவித்த மத்திய அரசு, கடந்த 2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. இதனால்  அப்போதிலிருந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த வருடம் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க  காரணமான பீட்டா அமைப்பை எதிர்த்தும் தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மூன்றாவது நாளாகத் தொடரும் போராட்டங்களில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் – குறிப்பாக பெண்கள், குழந்தைகளும் கலந்துகொண்டு வருகிறார்கள். இரவு நேரத்திலும் பெண்கள் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல் துறையினர் கடுமையான  தடியடி நடத்துகின்றனர். சிலசமயம் கைது செய்கின்றனர்.

இந்த நிலையில், வழக்கறிஞர் ராஜா ராமன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும் என்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் போராடுவதால் உடனடியாக உரிய  உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருடைய கோரிக்கையை நிராகரித்தனர்.  இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கில் கடந்த பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு அளிக்கும்படி தமிழக அரசு சார்பாக வைத்த வேண்டுகோளையும் உச்சநீதிமன்றம் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article