நியூஸ்பாண்ட்

“வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ளவும்” என்று செய்தி அனுப்பினார் நியூஸ்பாண்ட்.

”அய்யா நியூஸ்…  ஏன் நேரில் வர மாட்டீரோ..?“

”‘ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறதே.. உமக்குத் தெரியாதா? மெரினா அருகில் இருக்கிறேன்…!”

“லைவ் ரிப்போர்ட்டா?“

”அதற்குத்தான் உமது நிருபர் படை இருக்கிறதே! நான் சொல்லப்போவது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த வேறு சில தகவல்கள்!”

“சொல்லும்.. சொல்லும்!”

“கடந்த இரண்டு வருடங்களாகவே ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடத்துவங்கினார்கள்.

முதல்வர் ஓ.பி.எஸ்ஸை பொறுத்தவரை, மற்ற பெரும்பாலான அரசியல்வாதிகளைப்போலத்தான் அவரும். ஜல்லிக்கட்டு, தமிழ் பாரம்பரியம் என்றெல்லாம் மூளையைக் குழப்பிக்கொள்ளும் வழக்கம் அவருக்கு இல்லை. கடந்த இரண்டு வருடங்கள் மட்டுமல்ல.. தற்போதும்கூட ஜல்லிக்கட்டு நடத்த முடியாதோ என்றெல்லாம் அவர் பதறியதே இல்லை!”

“ஆமாம்..! அவர் உண்டு.. பதவி உண்டு… பிஸினஸ்கள் உண்டு.. சேகர் ரெட்டி மாதிரியான நண்பர்கள் உண்டு.. என்று அமைதியாக இருக்கும்  நபர்தானே அவர்!”

“ஹாஹா.. ஆமாம்! அதே நேரம், அவரும் பலவித சிக்கல்களை அனுபவித்து வருகிறார் என்கிறார்கள். மத்திய பாஜக அரசின் வழிகாட்டுதல்படி நடக்க வேண்டிய கட்டாயம். இன்னொரு பக்கம், சின்ன அம்மாவுக்கு அணுக்கமாக இருக்கவேண்டிய நிலை…!”

“ம்…”

“இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால்.. அதை சொல்லி ஓ.பி.எஸ் பதவியை பறிக்கலாம் என்பது சிலரது திட்டமாம்!”

“ஓ…!”

“ஜல்லிக்கட்டு  போராட்டம் துவங்கியபோது  இது  ஓ.பி.எஸ்ஸுக்கு புரியவில்லையாம். அந்த நேரத்தில்தான் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது கடுமையாக காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

ஓ.பி.எஸ்ஸுக்கு விசயம் புரிந்தபோது, தனது வழக்கமான நிதானத்தை செயல்படுத்த ஆரம்பித்தார். அதாவது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையிடம், போராட்டக்காரர்களிடம் மிக  மென்மையாக நடந்துகொள்ள உத்தரவிட்டார்!”

“ம்…”

“இதையடுத்துதான் தடி தூக்கிய  காக்கிகள், போராட்டக்கார்களுக்கு வாட்டர் பாக்கெட், உணவுசப்ளை, மருத்துவ டெண்ட்.. எல்லாவற்றையும் அனுமதித்தது. போராட்டம் என்பது கொண்டாட்டம் போல் ஆனது!”

“உண்மைதான். நானும் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்பதற்காக சிசுக்களை எல்லாம் தூக்கிக்கொண்டு தாய்மார்கள் போராட்டத்துக்கு போனார்கள் என்று கிண்டலடிக்கிறார்களே சிலர்..!”

“அது தவறு. முழுக்க அப்படிச் சொல்லிவிட முடியாது. உணர்வுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களே அதிகம்!”

“சரி. சரி..”

“விசயத்துக்கு வருகிறேன். தன்னைச் சுற்றி ஜல்லிக்கட்டு வலை பின்னப்படுவதை உணர்ந்த முதல்வர் ஓ.பி.எஸ்.,  இந்த போராட்டத்தையே கொண்ட்டாட்டம்போல் ஆக்கிவிட்டார் என்பதும் உண்மை.

இந்த நிலையில்தான், டில்லிக்கு பறந்துபோய், பிரதமரை சந்தி்த்து, தமிழக அரசே அவசர சட்டம் போடலாம் என தீர்மானித்து… பிரச்சினை முடந்தது என்று நினைத்தார்.

இதையடுத்துதான் இன்று காலை முதல், காவல்துறையினர், போராட்டக்களங்களில் குவிந்திருந்தவர்கள் கலையச்சொல்லி பணிவுடன் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று  ஆகப்பெரும்பாண்மையானவர்கள் மகிழ்ச்சியுடனே கலைந்தார்கள்.

ஆனால், மிகச் சிலர் இன்னமும் மோடி மற்றும் ஓ.பி.எஸ்ஸை.. குறிப்பாக ஓ.பி.எஸ்ஸை விமர்சித்து முழக்கமிட்டு எதிர்ப்பு காட்டினர்.”

“சொல்லும்..”

“குறிப்பாக சென்னை மெரினாவில் மிச்சமிருக்கும் இந்த சில போராட்டக்காரர்கள் வேண்டுமென்றே அலும்பு பிடித்தார்கள். அதோடு, இவர்களுடன் சேர்வதற்காக நாலா திசைகளிலிருந்தும் இன்று காலை வந்தார்கள். இப்படி நடக்கக்கூடும் என்பதை யூகித்த காவல்துறை, மெரினா செல்லும் சாலைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தடுப்புகளை அமைத்தது.

அதே நேரம், இந்த வழிகளில் ஆக்ரோசத்தோடு வந்தவர்களிடம், அமைதியாகவே பேசியது. ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பிறப்பித்தாகிவிட்டது. ஆகவே மகிழ்ச்சியுடன் கலைந்து செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது காவல்துறை.

ஆனால் வந்த கும்பல், கல்லெறிய ஆரம்பித்தது. இதையடுத்து தடியடி நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது காவல்துறை. அதோடு, கலவரக்கும்பல் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தது..”

“ஓ… கலவரம் வெடித்தது..”

“ஆம்.! இதைத்தான் ஆளும் தரப்பிலேயே சிலர் விரும்புகிறார்களாம். அவர்களைப் பொறுத்தவரை, தமிழக தலைநகரான சென்னையிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது என்று பெயர் வர வேண்டும். ஓ.பி.எஸ்.ை முதல்வர் பதிவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதுதான் திட்டம்!”

“நீர் சொல்வது இருக்கட்டும். “உள்ளுக்குள்ளேயே” தனக்கு மேல் இருப்பவர்கள், தன்னை விரும்பவில்லை என்றால் தானே விலகிவிடும் மனிதர்தானே ஓ.பி.எஸ்.?

”மனிதரின் மனநிலை எப்போது எப்படி மாறும் என்பதை யாரும் கணிக்க முடியாது அல்லவா. தவிர, தான் நினைத்தை செய்யும் நிலையில் ஒருவர் இருந்தாலாவது பரவாயில்லை. வடக்கே எங்கிருந்தோ தகவல் வர… அதை செயல்படுத்த வேணடிய நிலையில் இருப்பவரைப் பற்றி நாம் என்ன சொல்வது… “

“அதுவும் சரிதான்..”

“அப்புறம் ஒரு விசயம்… இந்த முறை ஜல்லிக்கட்டு பற்றி கட்சித் தலைவர்கள் பேசவதற்கு முன்பாகவே பேசியவர், சசிகலா நடராஜன். வழக்கம்போல பொங்கலை முன்னிட்டு தான் நடத்தும் விழாவில், ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை கலைப்பார்களா.. கலைத்துப் பார்க்கட்டும் என்று பேசினார்..”

“ஆமாம்…! தனது மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர். எப்போதுமே தமிழ்த்தேசிய குழுக்கள் சிலவற்றுடன் அணுக்மாக இருப்பவர்.  அப்படி ஒரு தமிழ் ஆர்வலரான அவர், ஜல்லிக்கட்டுக்காக ஆக்ரோசமாக பேசுவது இயல்புதானே…!”

“ஆமாமாம்…  இப்போது ஜல்லிக்கட்டு அனுமதிக்காக தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டம் பற்றி அவரிடம் கேளும். தமிழ்ப்பற்றுள்ள அவர், சரியாக கணித்துச் சொல்வார்!”

“நிச்சயமாக……”

“ அப்புறம்.. இந்த முறை நானே தலைப்பு கொடுக்கவா..”

“ஆகா.. தாராளமாக.. சொல்லும்!”

“ருத்ர தாண்டவம்!”