சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் புகழ் பெறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருவதோடு, தடையை அகற்றக் கோரி போராட்டங்களும் நடந்துவருகின்றன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில்  ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. இந்த போராட்டங்களுக்கு பல்வேறு சினிமா நட்சத்திரங்களும், கட்சி தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன், “குரல் கொடுக்க வேண்டிய கடமையை மாணவர்கள் கையில் எடுத்துள்ளார்கள். அது அவர்களின் குரலாகவே இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். ஆனால் தற்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஓட வைத்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று, அந்த ஒளியை பெற்றுக் கொள்ளக் கூடாது. இது மாணவர்களுடைய போராட்டம்  நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும்.

அறப்போட்டத்தில் ஈடுபடும் அவர்களை, தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.