சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் திரைப்படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவ தாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் என பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் வலியுறுத்தி முதல்வர் பன்னீர் இன்று காலை மோடியை சந்தித்தார். ஆனால், மோடி அவசர இயற்ற இயலாது என்று கூறிவிட்டதால் இளைஞர்கள் மேலும் கொந்தளித்துப்போய் உள்ளனர்.

நாளை தமிழகம் முழுவதும் கடை அடைப்பு நடைபெறுகிறுது. அரசு ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தமிழக பிரபல நடிகர்கள் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ள நிலையில், நாளை தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை (20ந் தேதி) திரைபடக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.