டில்லி,
ல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என மத்திய சுற்றுசூழல் மந்திரி அனில்மாதவ் தவே கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தினார். ஆனால், அவர் மத்திய அரசால் முடியாது என்று கூறினார்.

இந்நிலையில், மத்தியஅரசு வழக்கறிஞர் தமிழக அரசு சட்டம் இயற்றலாம் என்று கூறினார். அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் சட்டநிபுணர்களுடன் கலந்தாலோசித்து சட்டமுன் வடிவு தயார் செய்து, மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அவசர சட்ட வரைவுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், இந்த அவசர சட்ட வரைவினை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

இன்று இரவு அல்லது நாளை காலையில் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசின் ஆதரவைக் கேட்டு மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்,  மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவேயை சந்தித்தார்.

அப்போது மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவே கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முடிவு அறிவிக்கப்படும். பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம். தமிழகத்தின் பாரம்பரியத்தைக் காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

2011ம் ஆண்டில் நடந்ததுபோன்று மீண்டும் தவறு ஏற்படாத வகையில் முடிவு எடுக்கப்படும். அவசர சட்ட வரைவு இன்று கிடைத்துள்ளது.

நாளை காலைக்குள் திட்டவட்டமான முடிவு எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.