ஜல்லிக்கட்டு : அலங்காநல்லூரை நோக்கி  படையெடுக்கும் இளைஞர்கள்! சூழ்ந்து நிற்கும் காவலர்கள்! பதட்ட நிலை!

Must read

கோப்பு படம்

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் தமிழகம் முழுதும் ஆங்காங்கே நேற்று முன்தினத்தில் இருந்து ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

சில் இடங்களில் காவல்துறையினர் ஜல்லிக்கட்டை தடுத்து வருவதும் நடக்கிறது. அதே போல, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களை காவல்துறையினர் கடுமையான முறையில் ஒடுக்கி வருவதும் நடக்கிறது. மதுரை அவனியா புரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, அதில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் கடுமையாக தாக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில், இன்று ஜல்லிக்கட்டு நடக்க இருப்பதாக தகவல் பரவியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுதுமிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அலங்காநல்லூரை நோக்கி சென்று கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து அலங்காநல்லூர் பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அலங்காநல்லூருக்குச் செல்லும் முக்கிய சாலைகளை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தற்போது அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஜல்லிக்கட்டு வழக்கமாக நடக்கும் இடத்தின் அருகே கூடி நிற்கிறார்கள்.  கோயில் காளைகளுக்கு பூஜை நடத்தியபின்னர் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். . ஆனால் தற்போது வாடிவாசலுக்குள் நுழைய காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். வாடிவாசலை யாரும் நெருங்கிவிடமுடியாத படி காவல்துறையினர் அரணமைத்து பாதுகாப்பில் நின்று வருகின்றனர்.

இதனால் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும் சூழல் நிலவுகிறது.

இதற்கிடையேஅலங்காநல்லுரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

 

 

More articles

Latest article