ஈரோடு :
முதல்முறையாக ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதால், அதை பார்வையிட ஆயிரக்கணக் கானோர் குவிந்துள்ளனர். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. ஈரோடு, அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
போட்டியை ஒட்டி முதலில் கோவில் காளை விடப்பட்டு, அதன்பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன் றாக அவிழ்ந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் பாய்ந்து அடக்கியதை அங்கிருந்த பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். போட்டியின்போது மாடுகளை பிடித்த வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதுபோல, அரியலூர் மாவட்டம் கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 450க்கும் மேற்பட்ட காளைகளும், 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடிவீரர்கள் அடக்கினர்.
நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, பொது மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.