தற்போதைய நிலவரம்: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?: தொடரும் பதட்டம்

Must read

ஜல்லிக்கட்டு மீதான தடை, அவசரச்சட்டம் மூலம் நீக்கப்பட்டுவிட்டது என்று கூறிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை துவக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டி, இன்னமும் அங்கு மக்கள் போராடி வருவதால் ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கவனிக்கும் விழாக்குழுவினரில் ஆறுபேரை நேற்று சந்தித்த மதுரை ஆட்சியர், பிறகு, இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும், 350 காளைகள் கலந்துகொள்ளும் என்று அறிவித்தார்.

அதை உறுதிப்படுத்துவது போல அரசு தரப்பில் ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. மாடுகளை அவிழ்த்துவிடும் வாடிவாசல் பகுதியில், சுமார் பத்து மீட்டர் சுற்றளவு பகுதியை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

ஆனால், மக்கள் இன்னமும் அங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போதைய தற்காலிக தீர்வு வேண்டாம், நிரந்தர தீர்வு வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

காளைகள் வரும் வழியில், ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். வழக்கமாக பூஜை நடபெறும் காளி கோயில் முன்பும் மக்கள் திரண்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக வழக்கமாக அமைக்கப்படும் பார்வையாளர்கள் மாடம் (கேலரி) அமைக்கப்படவில்லை. மொத்தத்தில் வழக்கமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு பணிகள் பெரும்பாலும் நடக்கவில்லை.

ஒருபுறம் ஜல்லிக்கட்டு நடத்த அரசு தரப்பில் முயற்சி நடக்க.. ஆயிரக்கணக்கான மக்கள், நிரந்தர தீர்வு வேண்டி போராட்டம் நடத்தி வருவது தொடர்கிறது. ஆகவே ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பதட்ட நிலை தொடர்கிறது.

 

 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article