சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை புறப்பட்டார். விமான நிலையத்தில் அவர் கூறியதாவது,
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி, அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பில் 3-ந்தேதி போராட்டம் நடை பெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது. இந்த போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்ளும் என்றார்.
மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. பொங்கல் விழாக்கள் வரும்போதெல்லாம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என்று உறுதி அளிப்பார்கள். ஆனால் அது நடைமுறைக்கு வராது.
காட்டு விலங்குகள் பட்டியலில் இருக்கும் காளை மாடுகளை, அந்த பட்டியலில் இருந்து நீக்கி, வீட்டு விலங்குகள் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தனியாக போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இளங்கோவனுடன் ஏற்பட்ட கருத்துமோதல் குறித்து, நிருபர்களின் கேள்விக்கு பதில் கூறிய திருநாவுக்கரசர், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனுடன் வாக்குவாதம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நான் செயல்படவில்லை. பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களை விமர்சனம் செய்வதில் தவறு இல்லை.
இளங்கோவன் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை விமர்சனம் செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் எண்ணமும் இல்லை என்றார்.
மேலும், எனது மகனை பற்றி தவறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர் என்று கூறினார்.
தற்போது நிலவி வரும ரூபாய் நோட்டு பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.