சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பின் (JWA) சில பகுதிகளில் மேற்கூரை இடிந்து விழுந்தது மற்றும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இந்திய தொழில்நுட்ப கழகம் (சென்னை) (IIT-Madras) கடந்த 2023ம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டது.

ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் வலியுறுத்தியதை அடுத்து ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மனு சந்தானம் மற்றும் ராதாகிருஷ்ண ஜி. பிள்ளை ஆகியோர் தலைமையிலான குழு மேற்கொண்ட மதிப்பாய்வில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமான நடைமுறைகளில் தரமற்ற நிலையைக் கண்டறிந்தனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டி ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் கட்டிடம் மோசமாக பாதிக்கப்பட்டதன் மூல காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

கட்டுமானம் உறுதியாக இல்லாத இடங்களில் கான்கிரீட் கொண்டு மறைத்தும் மற்றும் அதிகப்படியான சிமெண்ட் பயன்படுத்தி பூசுவேலை மூலம் சரிசெய்தல், தரை ஓடுகளுக்கு கீழே பல இடங்களில் சிமென்ட்டுக்கு பதிலாக மணல் பயன்படுத்துதல், கட்டுமான நடைமுறைகள் மற்றும் கட்டுமானத்தின் போது நடத்தப்படும் பொருள் சோதனைக்கான போதுமான ஆவணங்கள் இல்லாதது மற்றும் பிளான் டீவியேஷன் என பல முறைகேடுகளை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, கட்டிடத்தை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்ற நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அனைத்து கட்டிடங்களையும் (பிளாக்குகள் A, B மற்றும் C) இடித்துவிட்டு மீண்டும் கட்டவேண்டும் என்று கட்டுமான நிறுவனத்துக்கு அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

தொழில்நுட்ப குறைபாடுகளை கருத்தில் கொண்டு, குடியிருப்பாளர்களின் நீண்டகால பாதுகாப்பை மனதில் கொண்டும், அனைத்து குடியிருப்பாளர்களையும் வெளியேற்றுவதும், கட்டிடங்களை இடித்து புனரமைப்பதும் (பிளாக்குகள் ஏ, பி மற்றும் சி) அவசியம் என்று IIT-Madras மதிப்பீட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது.

அருணாச்சலம் தெருவில் அமைந்துள்ள JWA அடுக்குமாடி குடியிருப்பு, A, B மற்றும் C பிளாக்குகளை உள்ளடக்கியது, மேலும் ஓவ்வொரு பிளாக்கிலும் A மற்றும் B என இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது ஒவ்வொன்றிலும் 18 மாடிகளைக் கொண்டது. இதில் மொத்தம், 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

A மற்றும் B பிளாக் கட்டிடங்கள் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என்றும் பிளாக் C சற்று அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்திய அவர்கள் A மற்றும் B பிளாக் இடித்து கட்டப்படும் வரை அதிகபட்சம் ஓராண்டுக்கு அதில் உள்ளவர்களை C பிளாக்கில் தற்காலிக தங்குமிடமாக வழங்கலாம் என்றும் ஓராண்டு கழித்து C பிளாக்கில் உள்ளவர்களை புதிய கட்டிடங்களில் தங்க வைத்து பின்னர் அதையும் இடித்துவிட்டு கட்டலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழுக்கு ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில், “வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரமான வீடுகளை வழங்கும் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கையை துவங்கியுள்ளோம்” என்றும் இது தொடர்பாக அந்த அடுக்குமாடி சங்க உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை மாலை கூட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.