சென்னை: மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் தயாரித்தப் பொருட்களில், சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநர் மற்றும் வழக்கறிஞர் பி.புகழேந்தி, இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறைச்சாலையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தெரியவந்துள்ளது என்றும்,  அங்கு  அதிகமாக பொருட்கள் உற்பத்தி செய்ததாகவும், அதற்கு சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காட்டப்பட்டு உள்ளது.  குறைந்த அளவு பொருட்கள் உற்பத்தி செய்து, அதிக உற்பத்தி செய்ததுபோல் கணக்கு காண்பித்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடந்த இந்த ஊழலில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடு தொடர்பாக தமிழகஅரசின் உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்,  லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை ஓரிரு நாளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.